Picture
Picture




நீங்களும் கவிதைகளை எழுதி அனுப்பலாம். உங்கள் கவிதைகளையும் வெளியிட "இன்பர்சிட்டி.காம்" களம் அமைத்துத் தருகின்றது
.

  இ . மெயில் : inparuddy@gmail.com
Share/Bookmark

 காத்திருக்கும் காலம்                        -  இளந்திரையன்

Picture
காலம் நீண்டு செல்கின்றது
என் மண்ணில்
ஒரு சுதந்திர மூச்சுக்காய்
காத்திருக்கும் காலம்
நீண்டு செல்கின்றது

பச்சை வயல்களையும்
குச்சு வீடுகளையும்
அலையெறியும் கடலையும் -அதில்
துடிக்கும் கதிரொளியையும்

பார்த்து நாளாகின்றது
பாசத்துடன் ஒரு அழைப்பையும்
நடு நடுங்கும் கரங்களின்
தலை தடவலையும் -அதை
உணரும் ஆன்மத்தின் சிலிர்ப்பையும்

நாட்கள் யுகங்களாகின்றது
பச்சை டாலர்களும்
பகட்டு வாழ்க்கையும்
வெட்கமின்றித் திருடிக்கொள்ளும்
எல்லாவற்றையும்

காலம் நீண்டு செல்கின்றது
காலடியில் நிழலளக்கும் நேரமும்
கூரையின் மேலால் குதித்துவரும்
சூரியனும் பச்சைப் பூவரசில்
தேங்கி விடும் வெப்பமும்
அதற்கும் மேலான சுதந்திரமும்

என்மனதில் பதிந்துவிட்ட வாழ்க்கையோ
ஆழ்கடலின் அமுக்கத்தில்
பொருமி நிற்கும் அமைதிபோல
ஒரு புயலுக்கு முன்னாலுள்ள
சினக்கும் கணங்கள் போல

பார்த்து நாளாகின்றது
போகும் தூரம் நீண்டுவிடுகின்ற
போதிலும் தளரா நம்பிக்கை
தளையிட்டே நிற்கின்றது
ஏறி மிதித்துவிடும் வேகத்துடனும்

தோளில் சுமையுடனும்
தடையில்லா நம்பிக்கையுடனும்
மூச்சில் அனலுடனும்
முன்னால் போகின்றவர்களே
நானும் வந்து விடுவேன்-நம்
வாழ்க்கை பற்றிய பாடல்களுடன்

காத்திருக்கும் காலம்
யுகமானாலும் ஒரு நூற்றாண்டுக்
கனவுகளுடன் என் மண்ணில்
ஒரு சுதந்திர மூச்சுடனும்
அதற்கான நியாயங்களுடனும்

ஒற்றை ரகசியம் - உமா மகேஸ்வரி

Picture


என் மென்மைகளை
ஊற்றிவிடுகிறேன் ஒவ்வொரு நாளும்
செம்பருத்தியின் வேருக்கு

உருட்டி வைக்கிற எனது
நட்புணர்வில்
அலகு பதிக்கும் காகம்
உன்னைக் கண்டதேயில்லை

நமதில்லாத குழந்தைகளைத் தழுவும்போதுதான்
தளிர்க்கிறது என் தாய்மை நிபந்தனைகளின்றி

நள்ளிரவில்
நட்சத்திரங்கள் தேங்கிய மாடித்தளம்
என் பாதம் வழி ஊடுருவிப்
பகிரும் கிளர்ச்சிகளை
ஒவ்வொரு மழையின் போதும்
இளகிப் பொழிவித்திட முடிகிறது என்னையும்

மோகங்கள் தாபங்கள்
முற்றுப்பெறாத சஞ்சலங்கள்
மற்றும் நீ தொடவொண்ணாத
தூய்மையின் ஆழங்களோடு
சாறுகள் பிழிபட்ட
வெற்றுச் சக்கையின் கிடப்பே
உன் கட்டிலுக்கு என்றுணர்கையில்
அடைகிறேன் உனை வென்ற உவகையை
நீ அறியவியலா ஒற்றை ரகசியமாக

Picture
Picture
Picture
Picture
Picture