இன்பத்துப்பால்

காதற் சிறப்பு உரைத்தல்

Picture
தலைவனும் தலைவியும் ஒருவர் மேல் ஒருவர் கொண்ட காதலின் சிறப்பைச் சொல்லும் அதிகாரம் இது. முதல் ஐந்து குறட்பாக்களும் காதலன் கூறுவதாகவும் அடுத்த ஐந்து குறட்பாக்களும் காதலி கூறுவதாகவும் அமைத்திருக்கிறார் வள்ளுவர் பெருமான்.

***

பாலொடு தேன் கலந்தற்றே பணிமொழி
வால் எயிறு ஊறிய நீர்.

இந்த மென்மையாகப் பேசி மனத்திற்கு இனிமை சேர்க்கும் இந்தப் பெண்ணின் வெண்ணிறப் பற்களில் ஊறிய எச்சில் வெறும் சுவையில்லாத நீர் இல்லை; அது பாலும் தேனும் கலந்தது போல் சுவையுடையது.

பாலொடு தேன் கலந்து அற்றே - பாலும் தேனும் கலந்தது போல் உள்ளதே

பணிமொழி - இனிமையும் மென்மையும் கூடிய சொற்களை உடைய பெண்

வால் - வெண்மையான

எயிறு - பற்களில்

ஊறிய நீர்.

இயல்பாக எச்சில் விலக்கத்தக்கது; வெறுக்கத்தக்கது. எச்சில்பண்டத்தை யாரும் உண்ண விரும்ப மாட்டார்கள். ஆனால் காதலர்கள் நடுவில் அதே எச்சிலே அமுதமாக ஆகிவிடுவதைக் காண்கிறோம். சொல்லும் மொழியும் தோன்றும் காலத்திற்கு முன்பிருந்தே இதே நிலை தான் போலும். வள்ளுவர் காலத்திலும் அப்படியே இருந்திருக்கிறது.


காதலியின் வாயில் ஊறிய நீர் வெறும் சுவையில்லாத நீர் இல்லை; அது அவள் வெண்மையான பற்களில் ஊறி ஊறி மிக்கச் சுவை பெற்றது போல் இருக்கிறது காதலனுக்கு.

பால் மட்டும் தனித்து உண்டால் அதில் உள்ள இனிமை குறைவாக இருப்பதால் நிறைய அருந்தத் தோன்றாது. தேன் மட்டும் தனியாக உண்டால் அதன் இனிமை மிகுதியாக இருப்பதால் அதிகம் அருந்த முடியாமல் திகட்டும். ஆனால் பாலும் தேனும் கலந்த போது இரு இனிமைகளும் ஒன்றுடன் ஒன்று கூடி அருந்தக் கூடிய இனிமை பெற்று அருந்த அருந்தத் திகட்டாதத் தித்திப்பைக் கொண்டிருக்கும்.

பாலை மட்டும் இவள் வால் எயிறு ஊறிய நீருக்கு ஒப்பாகக் கூறினாலோ தேனை மட்டும் கூறினாலோ இவள் வாய் அமுதம் உண்ணுவதில் காதலனுக்குச் சலிப்பு ஏற்படலாம் என்ற குறிப்பு கிடைக்கும். இங்கே பாலும் தேனும் கலந்தது போல் இருக்கிறது இவள் வால் எயிறு ஊறிய நீர் என்று சொன்னதால் இவள் வாய் அமுதம் உண்பதில் இவனுக்கு சலிப்பே ஏற்படுவதில்லை; தொடர்ந்து அருந்திக் கொண்டே இருக்க வேண்டும் என்னும் ஆவலைத் தருகின்றது என்ற குறிப்பு கிடைக்கிறது.