துலாம் ராசி

Picture
சித்திரை 3,4 பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3 பாதங்கள்

(பை, பௌ, ர, ரி, ரு, ரே, ரோ, த, தா, தி, து, தூ, தே)

நேர்மையில் இருந்து எந்த நிலையிலும் தவறாத துலாம் ராசி நேயர்களே! உங்களுக்கு எங்களது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இந்த ஆண்டின் முற்பகுதி உங்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். ஆனால் பிற்பகுதி சுமாராகத்தான் இருக்கும். இருப்பினும் மாதக் கிரங்களின் துணையாலும் இறைவன் திருவருளாலும் அதையும் சமாளித்து வெற்றிகாணக் கூடியவர் தாங்கள் என்பது எங்களுக்கு தெரியும்.

இந்தக் காலங்களில் சிலருக்கு வண்டி வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். சிலர் புதிய கால் நடைகளை வாங்குவார்கள். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். குடும்பத்தில் மனநிம்மதியும், மனமகிழ்ச்சியும் ஏற்படும். திருமணம் ஆகாமல் தடைபட்டு வந்த சிலருக்கு இது திருமணம் ஆகும் காலமாக இருக்கும். புத்திர புத்திரிகளின் கல்வி முன்னேற்றம் இருக்கும். அவர்களது திருமணம் மற்றும் வேலை வாய்ப்பு போன்றவற்றால், தற்சமயம் மகிழ்ச்சியான சுபகாரியங்களும், நல்ல வேலை வாய்ப்பும் கிடைக்கும்.

மனோபலம் மேலோங்கும். எந்த செயலையும் புத்திசாதுர்யத்துடன் எளிதில் செய்து முடித்து விடுவீர்கள். தந்தை நலமடைவார். தந்தை வழி உறவினர்களால் நன்மைகள் உண்டு.

இருப்பினும் இந்த ஆண்டின் பின்பகுதி சற்று சோதனையைக் கொடுக்கக் கூடியதாக இருக்கும். தொழில் முன்னேற்றம் தடை படும். கொடுக்கல் வாங்கலில் சிக்கலான சூழ்நிலையே காணப்படும். தேவைகளைக் காலம் அறிந்து பூர்த்தி செய்ய முடியாத காரணத்தினால் குடும்பத்தில் அவ்வப்போது கருத்து வேறுபாடுகளும் சண்டை சச்சரவுகளும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. சொல்வாக்கு செல்வாக்கு கௌரவம் அந்தஸ்து பாதிக்கப்படலாம். தாயாரின் உடல் நலம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. தாயாதி உறவினர்களால் விரையச் செலவுகள் ஏற்படக்கூடும். வண்டி வாகனம், நிலம் நகைகள் இவற்றை அடகுவைக்கவோ, அல்லது விற்கவோ வேண்டிய சூழ்நிலைகள் உருவாகலாம். நீதி நெறி தவறாமல் நேர்மையில் இருந்து பிறழாமல் வாழ்க்கையுடையவராக நீங்கள் இருப்பீர்களேயானால் அரிச்சந்திரன் சந்தித்த அந்த சோதனைகளை எல்லாம் நீங்கள் சந்திக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாவீர்கள்.

இந்த காலக்கட்டத்தில் சிலருக்கு அமானுஷ்ய சக்தியால் எதிரிகள் பாதிப்பிகனை ஏற்படுத்தும் வாய்ப்புகளும் உண்டு. சிலருக்கு புத்திர புத்திரிகளின் போக்கு மனக் கவலையை ஏற்படுத்தும். குடும்பத்தில் நல்ல காரியங்கள் சுபகாரியங்கள் தள்ளிபோவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. சிலருக்கு எல்லா விஷயங்களிலும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாதது போன்ற சூழ்நிலை உருவாகும்.

மாத வாரியான பலன்கள்

ஜனவரி: மனோபலம் அதிகமாகும். உடல் நலிவுகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் பெறும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட்டு வெற்றியடைவீர்கள். வெளியூரில் வேலை செய்யும் சிலர் தங்கள் ஊருக்கு மாற்றலாகி வருவார்கள். எதிரிகள் அடங்கியிருப்பார்கள். இருப்பினும் மனதில் ஏதோ ஒரு குறை இருந்துக்கொண்டே இருக்கும். தொழில் மேன்மை அடையும். கொடுக்கல் வாங்கலில் திருப்திகரமான சூழ்நிலை காணப்படும். செல்வாக்கு, சொல்வாக்கு புகழ், அந்தஸ்து மேலோங்கும்.

பிப்ரவரி: புதிய நண்பர்கள் வந்து சேர்வார்கள். எதிர்பாராத தன லாபம் கிடைக்கும். குடும்பத்தில் விருந்தினர் வருகை அதிகமாகும். அதன் காரணத்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். செலவினங்கள் அதிகமாகும். உடல் நலிவுகள் நீங்கும். மருத்துவச் செலவுகள் குறையும். இருப்பினும் வாழ்க்கைத் துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை.

மார்ச்: எதிரிகள் போட்டியாளர்களின் தொல்லைகள் அதிகமாகும். புத்திர புத்திரிகளால் மனக்கவலை ஏற்படும். பூர்வீகச் சொத்தில் வில்லங்கங்கள், விரையங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏதோ இனம் தெரியாத மன வருத்தம் இருந்துக் கொண்டேயிருக்கும். கணவன் மனைவி உறவு திருப்திகரமாக இல்லை. குடும்பத்தாருடன் கனிவுடன் பழகுவது நல்லது. உடல் நலத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும். அலைச்சல் அதிகரிக்கும்.

ஏப்ரல்: பெண்களால் தொல்லைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மனதில் ஏற்பட்ட குழப்பம் புத்தியையும் மந்தமடையச் செய்யும். எனவே முடிந்தவரை அமைதியாக எந்தப் பிரச்சினையையும் அணுகுவதே நல்லது. எச்சரிக்கையயுடன் பேசிப் பழகாவிட்டால் பலரது விரோதங்களுக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலைகள் உருவாகும் தேவையற்ற சண்டை சச்சரவுகள், தேடிவரும் வம்புவழக்குகள் இவற்றால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

மே: பயணங்களின் போது எச்சரிகையுடன் இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் சிறுசிறு விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புண்டு. தொழில் வியாபாரம் முன்னேற்றமடையும். கொடுக்கல் வாங்கலில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். மூத்த சகோதரன் மேன்மை அடைவார். அவரால் உங்களுக்கு நன்மைகள் உண்டு. ஆடை ஆபரணங்கள் வாங்குவதற்கான வாய்ப்புகளுண்டு. கணவன் மனைவி உறவு திருப்தியைத்தரும்.

ஜூன்: நாகரீகமான பொருட்கள் வாங்கவும், ஆடம்பரமான செலவுகள் செய்யவும் சூழ்நிலை உருவாகும். பெண்களால் நன்மைகள் உண்டு. சிலர் புதிய வீடு, மனைகள் வாங்குவதற்கான வாய்ப்பினைப் பெறுவீர்கள். சிலருக்கு பெண்களால் நன்மைகள் ஏற்படக்கூடும். புத்திர பேறு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. இருப்பினும் வாழ்க்கைத் துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. அவரது உடல் நலம் பாதிக்கப்படலாம்.

ஜூலை: தந்தை மேன்மை அடைவார். தந்தை வழி உறவினர்களால் நன்மைகள் உண்டு. எதையும் அனுபவிக்கக்கூடிய பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறுவதற்கான சூழ்நிலை காணப்படுகிறது. சுப விரையம் ஏற்படக்கூடும். பயணஙகளின் போது எச்சரிக்கையுடன் இல்லாவிட்டால் துன்பங்கள் சந்திக்க வேண்டி இருக்கும். எதிரிகளின் தொல்லைகள் ஒழியும். தேவைக்கேற்ற வருமானம் கிடைக்கும். தொழில் வியாபாரம் மேன்மை அடையும். அலுவலகத்தில் ஒரு இணக்கமான சூழ்நிலை நிலவும்.

ஆகஸ்ட்: இதுவரை தொல்லை கொடுத்து வந்த விவகாரங்கள் அனைத்தும் ஒரு நல்ல முடிவுக்கு வரும். தன தான்யலாபம், வண்டி வாகனச் சேர்க்கைகள் ஏற்படும். தொழில் வியாபாரம் அபிவிருத்தி அடையும். இருப்பினும் அவ்வப்போது சில விரையச் செலவுகளும் ஏற்படும். எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றி பெறுவீர்கள்.

செப்டம்பர்: தொழில் வியாபாரம் மேன்மை அடையும். செய்யும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் மேன்மை அடைவார்கள். அவர்களால் எதிர்பார்த்த நேரத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடல் நலம் பெறும். சிலர் சொந்த ஊருக்கு திரும்புவார்கள். கௌரவப் பதவிகளும் பட்டங்களும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. எதிர்பாராத தனலாபம் கிடைக்கும்.

அக்டோபர்: வேலைப்பளு குறையும். நல்ல உணவு கிடைக்கும். விருந்து கேளிக்கைகளில் கலந்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். பெண்களால் நன்மைகள் உண் டு. கணவன் மனைவி உறவு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். புதிய ஆடை ஆபரணச் சேர்க்கைகள் ஏற்படும். வீட்டில் சுப காரியம் நடைபெறும். சுபச் செலவுகள் ஏற்படும். தந்தை உடல் நலம் பெறுவார். தந்தை வழி உறவினர்களால் நன்மைகள் உண்டு. எந்தக் காரியத்தையும் பொறுமையுடனும் நிதாதனத்துடனும் செய்து வெற்றிபெறுவீர்கள்.

நவம்பர்: அலைச்சல்கள் அதிகமாகும். செய்யும் தொழிலில் வருமானம் குறையும். உடல் நலம் பாதிக்கப்படலாம். உஷ்ண ஆதிக்கம் உடலில் அதிகம் ஆகும். இருப்பினும் மனோபலம் கூடும். எதிரிகளால் தொல்லைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. கடன் தொல்லைகள் கட்டுக்கு அடங்காமல் போவதற்கான வாய்ப்புகள் உண்டு. மருத்துவச் செலவுகள் அதிகமாகலாம்.

டிசம்பர்: சொல்வாக்கு செல்வாக்கு அதிகமாகும். தொழிலில் முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். கௌரவம் அந்தஸ்து ஏற்படும். ஆடை ஆபரணம் அணி மணி சேர்க்கைகள் உண்டு. எதிரிகளின் தொல்லைகள் ஒழிந்துப்போகும். புதிய சினேகிதர்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. இருப்பினும் கண் சம்பந்தமான பாதிப்புக்கள் ஏற்படலாம். இருப்பினும் செலவினங்கள் அதிகமாக வாய்ப்புகள் உண்டு. மொத்தத்தில் இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

பரிகாரம்: ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி அன்றும் கால பைரவரை வழிபட்டுவர இந்த ஆண்டு முழுவதும் சிறப்பான ஆண்டாக இருக்கும்.

மீண்டும் உங்களுக்கு எங்களது வாழ்த்துக்கள்.