விருச்சிகம்
ஆழ்ந்த சிந்தனையும், பிரச்சனைகளை கண்டு பின்வாங்காமல் அந்த இடத்திலேயே பதிலடி கொடுக்கும் ஆற்றலும் உடையவர்கள் நீங்கள் தான். நான்கு முக்கிய கிரகங்கள் பண வீடான 2-ம் வீட்டில் அமர்ந்திருக்கும் வேளையில் இந்த புத்தாண்டு பிறப்பதால் நாலாவிதத்திலும் உழைத்து வருமானத்தை பெருக்குவீர்கள். குடும்பத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். கல்வித்தகுதியை உயர்த்திக் கொள்வீர்கள். அறிஞர்களின் நட்பு கிடைக்கும். சனி பகவான் லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் சிலர் வெளிநாட்டுத் தொடர்புடன் வியாபாரம் தொடங்கி அதிக பணம் சம்பாதிப்பீர்கள். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிட்டீர்களே! இனி தயக்கம், தடுமாற்றம் நீங்கி தைரியம் பிறக்கும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வீடு கட்ட, வாங்க, வாகனம் வாங்க லோன் கிடைக்கும். மூத்த சகோதரர்களுக்கு நல்ல விதத்தில் திருமணம் முடியும். சின்ன விஷயங்களை கூட முடிக்க முடியாமல் திணறினீர்களே! இனி முதல் முயற்சியிலேயே முடியும். என்றாலும் சனி உங்கள் ராசியை பார்ப்பதால் முன்கோபம், தலைச்சுற்றல், எதிலும் எரிச்சல் வந்து போகும். 3. 5.2010 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்வதால் தாயாருக்கு கால்வலி, சளித்தொந்தரவு வந்து நீங்கும். உறவினர்கள், நண்பர்களின் நடவடிக்கையால் கணவன் மனைவிக்குள் உறவு நிலை பாதிக்கும். எனவே மற்றவர்கள் சொல்வதை கேட்காமல் சுயமாக யோசித்து முடிவெடுங்கள். இரவுநேர பயணங்களை தவிர்க்கப் பாருங்கள். இக்கால கட்டத்தில் கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்களின் பிரபல யோகாதிபதியான குருபகவான் அதிகாரம் மற்றும் வக்ர கதியில் 4. 5.2010 முதல் 6. 11.2010 முடிய பூர்வ புண்ய வீடான 5-ம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால் அடிமனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கும். தூக்கம் வரும். நரம்புக்கோளாறு, படபடப்பு, முன்கோபம் விலகும். குடும்பத்தில் மனைவி, பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். சந்தேகத்தால் பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். வசதி வாய்ப்புகள் இருந்தும் வீட்டில் விளையாட ஒரு குழந்தை இல்லையே என தவித்த பெற்றோருக்கு அழகான வாரிசு உருவாகும். வற்றிய பணப்பை நிரம்பும். அத்தியாவசிய செலவுகளை மட்டுமே இனி செய்வீர்கள். மகளுக்கு கல்யாணம் எதிர்பாராத விதமாக திடீரென ஏற்பாடாகும். மகனுக்கு இருந்த கூடாபழக்க வழக்கங்கள் நீங்கும். பூர்வீகச் சொத்தில் இருந்த வில்லங்கம் விலகும். வழக்குகள் சாதகமாகும். ராசிக்கு 2-ம் வீட்டில் ராகு நிற்பதால் யாரையும் வெளிப்படையாக விமர்சிக்க வேண்டாம். பார்வையை பரிசோதித்துக்கொள்ளுங்கள். முக்கிய பத்திரங்களில் கையெழுத்திடும் போது ஒருமுறைக்கு பல முறை படித்துப் பார்த்து கையெழுத்திடுங்கள். கேது ராசிக்கு 8-ல் வந்தமர்வதால் உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். மனைவிவழி உறவினர்களை மதிக்கத்தவறாதீர்கள். அண்டை அயலார் பிரச்சனைகளில் அநாவசியமாக மூக்கை நுழைக்காதீர்கள். ஆனால் ஆன்மீகச் சிந்தனை, பொது அறிவு, யோகா, தியானம் இவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். சிலருக்கு தடைபட்ட வெளிநாட்டுப் பயணம் கைகூடும். மே, ஜீன் மாதங்களில் பணவரவு உண்டு. நீண்டகால கனவான வீடு, மனை வாங்கும் திட்டம் நிறைவேறும். இடவசதியின்றி தவித்த சிலர் வேறு வீட்டிற்கு குடியேறுவார்கள். சொந்த ஊரில் உங்களின் புகழ் பரவும். குலதெய்வ கோவிலை புதுப்பிப்பீர்கள். வியாபாரிகளே! பக்கத்து கடைக்காரரையும், பங்குதாரரையும் நம்பி நட்டப்பட்டீர்களே! இனி சுயமாக சிந்தித்து முடிவெடுப்பீர்கள். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த லாபத்தை குறைத்து விற்பனை செய்வீர்கள். உணவு, மருந்து வகைகளால் ஆதாயமுண்டு. மே மாதம் முதல் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகஸ்தர்களே! வெளிப்படையாகப் பேசி வீண் விமர்சனங்களைச் சந்தித்தீர்களே! இனி இடம் பொருள் அறிந்து பேசுவீர்கள். மேலதிகாரியால அவ்வப்போது மன உளைச்சல் வந்தாலும், உங்களை நம்பித்தான் முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பதவி உயரும். கன்னிப்பெண்களே! சோம்பலிலிருந்து விடுபடுவீர்கள். தள்ளிப்போன திருமணம் சிறப்பாக நடந்து முடியும். உங்களின் தகுதிக்கேற்ப நல்ல வேலை அமையும். மாணவர்களே! கணிதம், அறிவியல் சம்பந்தப்பட்ட பாடமென்றாலே வெறுப்பு வந்ததே! இனி அவற்றிற்காக அதிக நேரம் ஒதுக்குவீர்கள். தேர்வில் மதிப்பெண் உயரும்.