Picture
 
தொழு நோய்...



தொழு நோய் மைக்கோபேக்டீரியம் என்கிற குச்சி வடிவிலான கண்ணுக்குத் தெரியாத கிருமியால் உண்டாகிறது. இதை 1873-ல் டாக்டர் ஹேன்ஸன் என்பவர் கண்டுபிடித்தார்.

சாதாரணமாக இது மனிதரின் மூலமே பரவுகிறது. தொழு நோய்க்கான சிகிச்சை பெறாத அதிகக் கிருமியுள்ள நோயாளி தும்மும் போதும் , இருமும் போதும், காறித் துப்பும் போதும் வெளிப்படும் கிருமிகளாலேயே இந்நோய் பரவுகிறது. தொழுநோய்க் கிருமிகள் தாக்கியதற்கும், இந்நோயின் அறிகுறிகள் வெளிப்படுவதற்கும் சுமார் 3 வருடம் முதல் 5 வருடம் வரை ஆகும். இதை "Incubation Period" என்று கூறுவர்.

இது மற்ற தொற்று வியாதிகளைப் போல் எல்லோருக்கும் வருவதில்லை. உடலில் அதிக தடுப்புச் சக்தி உள்ளவர்களை அதிகமாகத் தாக்குவதில்லை. குறிப்பிட்ட அளவை விடக் குறைவான தடுப்பு சக்தி உள்ளவர்களுக்கே இந்நோய் வருகிறது. ஒவ்வொருவரின் தடுப்பு சக்திக்கேற்ப இந்நோயின் வீரியம் வித்தியாசப்படுகிறது.

தொழுநோயா எனச் சந்தேகிக்க உதவும் சில அறிகுறிகள்.



  • உணர்ச்சியற்ற அல்லது உணர்ச்சி குறைந்த , வெளிர்ந்த அல்லது சிவந்த தேமல்... அந்தத் தேமல் மீது முடி உதிர்ந்து காணப்படுதல்



  • கை,கால்களில் மதமதப்பு அல்லது ஊசி குத்துவது போன்ற உணர்வு இருத்தல்.



  • தோல் தடித்தும் , எண்ணெய் பூசியது போன்ற தோற்றம்



  • உடலிலே ஏதாவது ஒரு பகுதியில் வியர்வை இல்லாமல் இருத்தல். அதே சமயம் உடலின் மற்ற பகுதிகளில் அளவுக்கு அதிகமாக வியர்த்தல்



  • காது மடல் தடித்திருத்தல்... கண் புருவமுடி உதிர்தல்



  • கன்னங்கள் தொங்குவது போன்ற நிலை.



  • சிங்க முகம் போன்ற தோற்றம் ( இது தற்போது சாதாரணமாகக் காணப்படுவதில்லை)



  • பாதங்களில் சாம்பல் பூசியது போல் காணப்படுதல் , பாதங்களில் பெரிய வெடிப்பு இருத்தல்



  • உள்ளங்கை சதை மேடுகள் சூம்பியிருத்தல்



  • கை, கால் விரல்கள் மடங்கியிருத்தல் , குறைந்திருத்தல், விரல்கள் திரும்பியிருத்தல்



  • கண்ணிமை மூட முடியாமலிருத்தல், கருவிழியிலே புண் இருத்தல்



  • முகத்தின் பாதி பாகம் (வலது அல்லது இடது) செயல் இழத்தல்



  • மணிக்கட்டு தொங்கி விடுதல்



  • கணுக்கால் செயலிழந்து போதல்



  • ஆறாத, உணர்ச்சியற்ற நீண்டநாள் புண்



  • சட்டையில் பொத்தான் போட முடியாமை , பேனாவைப் பிடித்து எழுத இயலாமை.



தொழுநோய் என உறுதி செய்ய



கீழ்க்கண்ட மூன்று அறிகுறிகளில் ஏதேனும் இரண்டைத் திட்டவட்டமாகக் கூற முடியுமானால் அதைத் தொழுநோய் என்று உறுதி செய்யலாம்.
1. உணர்ச்சியற்ற தேமல்
2. நரம்புகள் தடித்துக் காணப்படுதல்
3. தோல் பரிசோதனையில் மைக்கோ பேக்டீரியம் லெப்ரே கிருமிகள் காணப்படுதல்.



தோல் உணர்ச்சியின்மையைக் கண்டுபிடிக்க...



  • தொடு உணர்ச்சியை இறகு, பஞ்சு, நைலான் கயிறு போன்றவற்றின் மூலம் அறியலாம்.



  • வலி உணர்ச்சியை குண்டூசி ,பால்பாயிண்ட் பேனா ஆகியவற்றால் அறியலாம்.



  • பாதிக்கப்பட்ட பகுதி, பாதிக்கப்படாத பகுதி இவற்றில் பரிசோதனைகள் செய்து இவ்விரண்டு பகுதிகளில் ஏற்படுகிற தொடு உனர்வு , வலியுணர்வு மாறுதல்களை வைத்து அறியலாம்.



தொழுநோய் என்ற சந்தேகம் வந்து விட்டால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுகி அதற்கான சிகிச்சையைப் பெற்று விட வேண்டும்.



நன்றி :- தமிழக அரசு வெளியிட்ட தொழுநோய்க்கான சுகாதாரப் பணியாளர்கள் கையேடு



மருத்துவம்-2

மாறுகண் அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?



மாறுகண்



  • ஒரு கண் மட்டும் அல்லது இரண்டு கண்களும் மாறுபட்ட திசையில் இருப்பது மாறுகண் எனப்படும்.



  • சிலருக்கு மாறுகண் எப்போதும் இருக்கும் மற்றும் சிலருக்கு அவ்வப்போது ஏற்பட்டு மறையும்.



  • மாறுகண் உடைய குழந்தைகள் பார்க்கும் போது, ஒரு கண் நேராகவும், மறு கண் உட்புறமோ, வெளிப்புறமோ, மேல்நோக்கியோ அல்லது கீழ்நோக்கியோ இருக்கலாம்.



  • உரிய காலத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் சோம்பலுற்ற கண் என்ற நிலை உருவாகி நிரந்தர பார்வையிழப்பை ஏற்படுத்தும்.



மாறுகண்ணின் காரணங்கள்



  • பரம்பரையாக வருதல்



  • கண்தசைகள் பாதிக்கப்படுதல்



  • கண் தசைகளுக்கான நரம்பில் கோளாறு ஏற்படுதல்



  • கண்புரை, கருவிழி பாதிப்பு, கண் விழித்திரை கோளாறு, கண் நரம்பு கோளாறு, புற்று நோய்க் கட்டிகள், தூரப்பார்வை, கிட்டப்பார்வை ஆகியவற்றால் ஏற்படும் குறைவான பார்வை



  • காயம்படுதல்



அறிகுறிகள்



  • ஒரு கண் மட்டும் அல்லது இரண்டு கண்களும் மாறுபட்ட திசையில் இருக்கலாம்.



  • பார்வையில் குறைபாடு இருக்கலாம்.



  • பிரகாசமான வெளிச்சத்தில் ஒரு கண்ணை மட்டும் மூடிப் பார்க்கக் கூடும்.



  • இரண்டு கண்களையும் இணைத்துப் பார்க்க முயற்சிக்கும் போது தலையைச் சாய்த்தோ அல்லது திருப்பியோ பார்ப்பது போன்ற அறிகுறிகளும் சில சமயங்களில் தென்படலாம்.



  • சில சமயங்களில் பார்க்கும் பொருள் இரண்டாகத் தெரியலாம்.



  • மாறுகண் அதிர்ஷ்டத்தின் அறிகுறியல்ல. அது உங்கள் குழந்தையின் பார்வையையும் தோற்றத்தையும் பாதிக்கும்.



  • சிறு குழந்தைகளுக்கு மாறுகண் இருந்தால் இரண்டு வயதிற்குள்ளேயே உரிய சிகிச்சை அளித்தால் நிரந்தரமான பார்வை இழப்பைத் தவிர்க்கலாம்.



  • குழந்தை வளர்ந்த பிறகு, சிகிச்சை மூலம் வெளித்தோற்றத்தை மட்டுமே சரி செய்யலாம். இழந்த பார்வையைத் திரும்பப் பெற முடியாது.



நிரந்தர பார்வையிழப்பைத் தவிர்க்க சிகிச்சை முறைகள்



1. தூரப்பார்வை மற்றும் கிட்டப்பார்வையால் ஏற்படும் மாறுகண் உள்ளவர்களுக்கு தகுந்த கண்ணாடி அணிவிப்பதன் மூலம் பார்வையிழப்பைத் தவிர்க்கலாம்.



2. கண்களுக்கு பயிற்சி: மாறுகண் இல்லாத நல்ல பார்வையுடைய கண்ணை மறைத்து, மாறுகண் உடைய கண்ணால் பார்க்க வைப்பதன் மூலம், அந்த கண்ணின் பார்வையை மேம்படுத்தலாம்.



3. அறுவை சிகிச்சை:



  • நல்ல கண்ணை மூடி, மாறுகண்ணால் பார்க்க வைக்கும் பயிற்சி மற்றும் தகுந்த கண்ணாடி அணிவிப்பதன் மூலம், பார்வை மேம்பட்ட பிறகு மாறுகண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம்.



  • குழந்தைகளுக்கு மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை செய்யப்படும் .



  • மயக்க மருந்து கொடுக்கப்படும் குழந்தைகளுக்கு, அந்த சமயத்தில் காய்ச்சல், ஜலதோஷம், இருமல் போன்றவை இருக்கக் கூடாது.



  • ஒரே சமயத்தில் இரண்டு கண்களிலுமோ அல்லது ஒரு கண்ணில் மட்டுமோ அறுவை சிகிச்சை செய்யலாம்.



  • விழி வெண்படலத்தில், அதாவது விழிக்கோளத்தின் வெள்ளைப் பகுதியில்தான் அறுவை சிகிச்சை செய்யப்படும்.



  • அறுவை சிகிச்சை முடிந்த பின் ஒரு நாள் மட்டும் மருத்துவமனையில் தங்கினால் போதும்.



  • இந்த அறுவை சிகிச்சை செய்வதோடு சிகிச்சை முடிந்து விடுவதில்லை. தெளிவான பார்வையைப் பெறத் தொடர்ந்து கண்ணாடி அணிய வேண்டியிருக்கலாம். நல்ல நிலையில் உள்ள கண்ணை மறைத்து, மாறு கண்ணால் மட்டும் பார்க்க வைக்கும் பயிற்சியை அறுவைச் சிகிச்சைக்குப் பிறகும் நீடிக்க வேண்டியிருக்கலாம்.



நன்றி :-  மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை வெளியிட்ட சிறு கைப்பிரதி.



மருத்துவம்-3

நீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி?



நீரிழிவு நோய் என்பது என்ன?



அன்றாட அலுவல்களுக்குத் தேவையான சக்தியை உற்பத்தி செய்யும் குளுக்கோஸ் (சர்க்கரை) தான் உடலிலுள்ள செல்களுக்குத் தேவை. நாம் சாப்பிடும் உணவுதான் செரித்த பிறகு குளுக்கோஸாக மாறுகிறது. குளுக்கோஸ் இரத்த ஓட்டத்தில் கலந்து உடலிலுள்ள வெவ்வேறு செல்களைச் சென்றடைகிறது. உடலிலுள்ள கணையம் உற்பத்தி செய்யும் இன்சுலின் என்னும் ஹார்மோன்தான் உடலிலுள்ள செல்களைச் சென்றடையும் குளுக்கோஸ்க்கு மிகவும் அத்தியாவசியமாகும். போதுமான இன்சுலின் சுரக்காத போது, குளுக்கோஸ் செல்களுக்கு செல்ல இயலுவதில்லை. எனவே இரத்த ஓட்டத்தில் குளுக்கோஸ் அதிக அளவில் தங்கிவிடுகிறது. இந்த நிலைதான் ஹைப்பார்க்ளைசீமியா எனப்படும் நீரிழிவு நோய் ஆகும்.



உங்களுக்கு நீரிழிவு நோய் உள்ளதா?



கீழே இருக்கும் அறிகுறிகளையும் அதற்கு கொடுக்கப்பட்டுள்ள மதிப்பீடுகளையும் குறித்துக் கொள்ளுங்கள்.
1. அடிக்கடி சிறுநீர் கழித்தல் – 4
2. எப்போதும் பசித்தல் – 2
3. தண்ணீர் அதிகமாகக் குடிப்பது – 4
4. எப்போதும் களைப்பாக இருக்கும் – 2
5. ஆறாத புண் – 2
6. பிறப்புறுப்பில் இன்பெக்சன் – 3
7. உடலுறவில் ஈடுபாடு இல்லாதிருத்தல் – 2
8. காரணமில்லாமல் எடை குறைதல் – 2
9. இரத்த சொந்தங்களில் வேறு எவருக்கேனும் நீரிழிவு - 2
10. மிகக் கூடுதல் எடை – 3
11. கால் மரத்துப் போய் உறுத்துதல் – 2
12. மங்கலான பார்வை – 2
நீங்கள் உங்களுக்காகக் குறித்துள்ள மதிப்பீட்டின் கூட்டுத் தொகை 7-க்கு அதிகமாக இருந்தால் உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கலாம். எனவே தகுந்த மருத்துவரை அணுகி உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா? என்பதை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.



நீரிழிவை கவனிக்காததால் ஏற்படும் விளைவுகள்



நீரிழிவை துவக்கத்திலேயே கவனிக்கவில்லை என்றால் நிலைமை மோசமாகிவிடும் . கட்டுக்குள் இல்லாத நீரிழிவு ,பல முக்கியமான உடல் உறுப்புகளையும் செயல்பாடுகளையும் பாதித்துவிடும். குறிப்பாக,



  • பார்வையை இழக்க நேரிடலாம் அல்லது பார்வை மங்கலாம்.



  • சிறுநீரகங்கள் சேதமடையலாம்



  • இன்பெக்சன் அடிக்கடி ஏற்படலாம்



  • காங்கரீன் எனும் புண், பாதத்தில் பிரச்சனைகள் வரலாம்.



  • உடலுறவில் இயலாமை ஏற்படலாம்



  • மூளைச்சேதமும் ,மாரடைப்பும் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கலாம்.



நீரிழிவு நோயைத் துவக்கத்திலேயேக் கட்டுப்படுத்திவிட்டால் ,பல சிக்கல்கள் தடுக்கப்பட்டு நீங்கள் சாதாரண வாழ்க்கை வாழ உதவும்.



நீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி?



நீரிழிவு நோயின் சிகிச்சையில்
1. உணவுமுறை
2. உடற்பயிற்சி
3. நோயின் தீவீரத்தைத் தவறாமல் கண்காணித்தல் மற்றும் மாத்திரைகள் எடுத்துக்கொள்தல்
4. இன்சுலின் பயன்படுத்துதல்
இந்த சிகிச்சைகளைத் தகுந்த மருத்துவர்களின் ஆலோசனைகள் மூலம் எடுத்துக் கொள்வதால் நீரிழிவைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும். உங்களுக்கு நீரிழிவு இருந்தால் அதைக் குணப்படுத்த முடியாது. எனவே குணப்படுத்துவதாகச் சொல்லி ஏமாற்றுபவர்களின் வலையில் விழுந்து விடாமல் கவனமாயிருக்க வேண்டும்.



1. உணவு முறை



  • சப்பாத்தி அல்லது கோதுமை ரொட்டி , அரிசி, கேழ்வரகு போன்ற கார்போ- ஹைட்ரேட்கள் நிறைந்தவற்றைச் சாப்பிடுங்கள். இவைகளால் செலவுகளுமில்லை. நீங்கள் பசியுடன் இருந்தாலும் இனிப்புப் பதார்த்தங்கள் சாப்பிடும் பழக்கத்தை நிறுத்திவிடும்.



  • கொஞ்சமாகவும், நேரம் தவறாமலும் சாப்பிடவும். சாப்பாட்டு நேர இடைவெளியில் குறிப்பிட்ட சில பழங்கள் அல்லது காய்கறிகள் போன்ற சத்துள்ளவற்றைச் சாப்பிடவும்.



  • கொழுப்பு நீக்கப்பட்ட பால் மற்றும் தாவர எண்ணெய்யைப் பயன்படுத்தவும்.



  • சமையல் முறையை மாற்றி, வேகவைத்த, தீயில் வாட்டிய, நீராவியில் சமைத்த பதார்த்தங்களைச் சாப்பிடுங்கள்.



  • கொழுப்பு நிறைந்தவற்றை அதிகம் சாப்பிடக்கூடாது. கொழுப்பு பதார்த்தங்களான நெய், வெண்ணெய், பொறித்தவைகளான பூரி, சமோசா போன்றவற்றை தவிர்க்க வேண்டும். கொழுப்பு மிக்க இறைச்சி, வெண்ணெய் மற்றும் பொறித்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.



  • சர்க்கரை, வெல்லம்,தேன்,ஜாம், கேக்குகள் மற்றும் சாக்லேட்கள் போன்ற சர்க்கரைச் சத்து அதிகமுள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.



  • மீன்,கோழி , பாலாடைக்கட்டி மற்றும் ஸ்டார்ச் சத்துள்ள பதார்த்தங்களைக் குறைவாகச் சாப்பிட வேண்டும்.



நீரிழிவு நோய் உள்ளவர்கள் விரதம் இருக்கலாமா?



நீரிழிவு நோய்க் கட்டுப்பாட்டிற்குள் இருந்த நீங்கள் விரதம் கடைப்பிடிக்க விரும்பினால் முதலில் உங்கள் மருத்துவரை சந்தித்து ஆலோசிக்கவும். அவர் உடல்நிலைக்கேற்ப உணவு முறைகளையும் மருந்துகளையும் தெரிவிக்கலாம்.



நீரிழிவு நோய்க்கான உணவு வகைகள்



உங்கள் மருத்துவரிடம் உங்களுக்காக ஒரு உணவு அட்டவணையைத் தயார் செய்யச் சொல்லுங்கள். அது திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான சலிப்படையச் செய்யும் வகையில் இருக்காது. ஒருவருடைய தேவைக்கேற்பவும் விருப்பத்திற்கேற்பவும் பல மாற்று உணவு வகைகளை நீங்கள் சேர்த்துக் கொள்ள முடியும்.



மாற்று உணவு வகைகள் என்றால் என்ன?





ஆகாரத்தில் மாற்றங்கள் எளிதாக இருக்கும் வண்ணம் உருவாக்கப்பட்ட சமமாக இருக்கும் மற்ற உணவு வகைகள்தான் மாற்று உணவு வகை.ஓர் உணவு வகைக்குப் பதிலாக கீழ்கண்ட 7 மாற்று உணவு வகைளை மாற்றி மாற்றி சாப்பிடலாம்.



1. காய்கறிகள்
2. கார்போஹைட்ரேட்ஸ்.
3. பழங்கள்
4. இறைச்சி, மீன் மற்றும் பருப்புகள்
5. பால் மற்றும் பால் தயாரிப்புகள்
6. தானியங்கள்
7. எண்ணெய்,கொழுப்பு மற்றும் கொட்டை வகைகள்.



2. உடற்பயிற்சி.



நீரிழிவு நோய் உள்ளவர்கள் உடற்பயிற்சி செய்வதால்,
1. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
2. எடையைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
3. நல்ல உடல்நலத்துடன் இருக்கிறோம் என்ற உணர்வை அதிகரிக்கிறது.
4. உங்கள் உடலில் இன்சுலினுக்கு உகந்த நிலையை அதிகரிக்கிறது.



உடற்பயிற்சியில் கவனிக்க வேண்டியவை.



  • உங்கள் உடலுக்கேற்ற பயிற்சியைப் பற்றி முதலில் உங்கள் மருத்தவரிடம் கலந்தாலோசித்துக் கொள்வது நல்லது.



  • கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்து தவறாமல் செய்யவும்



  • மிதமான ஓட்டம், நீச்சல் போன்ற திடமான விளையாட்டுக்களில் பங்கெடுத்துக் கொள்ளவும்.



  • காலி வயிற்றுடன் உடற்பயிற்சி செய்யக் கூடாது.



  • இன்சுலின் ஊசி போட்டுக் கொண்ட உடனேயே உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும்.



  • இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமானதாக இருந்தால் உடற்பயிற்சி செய்யக் கூடாது. நீரிழிவு கட்டுக்குள் இல்லாத போதும் உடற்பயிற்சி செய்யக் கூடாது.



3. மாத்திரைகள்



சில சமயங்களில் , இரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரையைக் குறைக்க உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி மட்டும் போதாது. சர்க்கரை அளவை இரத்தத்தில் குறைக்கும் மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம். இது இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைய உதவும்.



சில மாத்திரைகள் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க, கணையத்தைத் தூண்டிவிடுகிறது. மாத்திரைகள் சிறப்பாகச் செயல்புரிய , இன்சுலின் சுரக்கும் அளவிற்கு நோயாளியின் கணையம் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.



சில மாத்திரைகள் , செல்லினுள் இன்சுலின் நுழைந்து செயல்புரிய உதவுகிறது. சில மாத்திரைகள் குடலிலிருந்து குளுக்கோஸ் இரத்தத்தில் கலப்பதைக் குறைக்க உதவுகின்றன.



4.இன்சுலின்



நீரிழிவு முற்றினால், பல நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் தவிர்க்க இயலாததாகி விடுகிறது. உங்கள் மருத்துவர் உங்களுக்கு இன்சுலின் போட்டுக் கொள்ள பரிந்துரை செய்து விட்டால் இன்சுலின் போட்டுக் கொள்ளத் தொடங்குவது நல்லது.



இன்சுலின் எப்படி செயலாற்றுகிறது?



இரைப்பைக்குப் பின்னால் உள்ள உறுப்பான கணையத்திலிருந்து உற்பத்தியாகும் ஒரு ஹார்மோன்தான் இன்சுலின். இன்சுலின் சுரக்காமல் போனால் அல்லது குறைவாகப் போனால் அல்லது செயல்பட முடியாமல் போனால் செல்களுக்குள் சர்க்கரை (குளுக்கோஸ்) செல்ல முடியாது. இரத்தத்திலேயே அதிக அளவில் தங்கிவிடும். எனவே நீரிழிவு முற்றினால், இன்சுலின் தவிர்க்க இயலாததாகி விடுகிறது. இன்சுலின் ஊசி போட்டுக் கொண்ட பிறகு இரத்த ஓட்டத்தில் கலந்து , உடல் முழுவதும் பரவுகிறது. செல்லின் மேற்பரப்பில் படர்ந்து செல்லினுள் சர்க்கரை புக வழி செய்கிறது.



இன்சுலினின் வகைகள்



இன்சுலின் இனம், செயல்பாடு மற்றும் அதன் சக்தியை வைத்து பிரிக்கப்பட்டுள்ளது.



இன்சுலின் அதன் மூலத்தைப் பொறுத்து ஹியூமன், போர்சைன், போவைன் போன்ற வகைகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன. ஹியூமன் இன்சுலின் மரபியல் மூலமாக அல்லது செமி சிந்தெடிக் முறையில் தயாரிக்கப் படுகிறது. போர்சைன், போவைன் இன்சுலின் முறையே பன்றி மற்றும் மாடுகளின் கணையங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது.



இன்சுலின் செயல்படும் கால அளவு, அதன் செயல்படும் திறன்களைக் கொண்டும் பல வகைகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.



இன்சுலின் ஊசி எப்படி தாமாகவே போட்டுக் கொள்வது?





  • முதலில் உங்கள் கைகளை நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்து கொள்ளவும்.



  • உங்கள் இன்சுலின் சக்திநிலைக்கு ஏற்ற சிரின்ஜைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். அதாவது 40 ஐ.யூ.இன்சுலினுக்கு 40 ஐ.யூ. சிரின்ஜ். நீங்கள் கலங்கலான இன்சுலினைப் பயன்படுத்தினால், உள்ளே இருக்கும் வண்டல் முழுவதும் நன்கு கலக்கும் வரையில் பாட்டிலைக் கவிழ்த்துக் குலுக்கவும்.



  • இன்சுலின் செலுத்த வேண்டிய அளவு வரை சிரின்ஜ் மூலம் பாட்டிலை நேராகப் பிடித்து காற்றை மெதுவாக உள்ளே செலுத்தவும்.



  • தேவையான அளவு இன்சுலினை இழுக்கவும். காற்றுக் குமிழிகளைப் போக்க சிரின்ஜை மெதுவாகத் தட்டவும்.



  • ஊசி போட வேண்டிய இடத்தில் உள்ள தோலைப் பிடித்து அகலமான மடிப்பினுள் தோலின் அடியில் உள்ள அடுத்த திசுவிற்கு எதிராக 90 டிகிரி கோணத்தில் ஊசியைக் குத்தவும்.



  • இன்சுலினை மெதுவாகச் செலுத்தவும் ஊசியை வெளியே எடுக்கும் பொழுது, அந்த இடத்தில் வேறொரு விரலால் அழுத்திக் கொண்டே எடுக்கவும்.



  • தோலின் அடியில் உள்ள திசுவில் மாறுதல் வராமல் இருக்க ஊசி போடும் இடத்தை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டியது அவசியம்



நினைவில் வைத்திருக்க வேண்டியவை.



  • நீங்கள் நீரிழிவைப் பற்றி அறிந்து, புரிந்து சமாளிக்க மனம் வைத்தால் போதும். மற்றவரைப் போல ஆரோக்கியமாக, உற்சாகமிக்க, மனம் நிறைந்த வாழ்க்கை வாழலாம்.



  • உங்கள் நோயைக் கட்டுப்படுத்த வேண்டிய முக்கிய நபர் நீங்கள்தான். மருத்துவரும்,மற்றவர்களும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் அறிவுரை வழங்குவார்கள்.



  • நீங்கள் நோயுற்றிருந்தாலும் இன்சுலினைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள். உங்களால் சாப்பிட முடியாத போது திரவநிலை உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.



  • சிகிச்சை எடுத்துக் கொண்டால் மட்டும் போதாது. சிகிச்சையின் முடிவுகளைத் தவறாமல் குறித்து வைத்துக் கொண்டால்தான் நீரிழிவை சிறப்பாகச் சமாளிக்க முடியும்.



  • தவறாமல் பரிசோதனைகள் செய்வதும், கவனமாகக் குறிப்பெடுத்துக் கொள்வதும் மிக முக்கியம்.



  • ஹைப்போக்ளைசீமியாவை உடனடியாக சமாளிக்க கையில் குளுக்கோஸ், சர்க்கரை போன்ற இனிப்புகளை வைத்துக் கொள்ளுங்கள்.



  • உங்கள் கைகள், பாதங்கள், கண்கள், பற்கள் மற்றும் சருமத்தை நன்கு கவனித்துக் கொள்ளவும்.



  • சரிவிகித உணவு, தவறாத உடற்பயிற்சி, மருந்துகள் மற்றும் நடக்கும் என்ற நம்பிக்கை போன்றவற்றால், நீரிழிவு இருந்தாலும் உங்கள் இலக்கை அடைய உதவும்.



நன்றி :-  " Magnus Novo Nordisk " வெளியிட்ட நீரிழிவுக்கான சிறு கைப்பிரதி.



  function disable(){ if (event.button == 2){alert("°.¸¸.·´¨`»»-(¯`Don’t Copy My Style!!!¯)-»«´¨`·.¸¸.°.")} }     google_protectAndRun("ads_core.google_render_ad", google_handleError, google_render_ad); மருத்துவம்-4

பல் வியாதிகள் - பாதுகாப்பு சிகிச்சைகள்

-டாக்டர். R. பாஸ்கரன் M.D.S., & டாக்டர். A. ஹேமலதா B.D.S.,



மனிதனுக்கு பற்கள் இன்றியமையாத உறுப்பாகும். உண்ணும் உணவுப் பொருட்களை நன்றாக அரைத்து அது எளிதில் செரிமானம் அடைய பற்கள் இன்றியமையாதது. முக அழகிற்கும், முகப் பொலிவிற்கும், பேசுவதற்கும் இந்தப் பற்கள் மிக முக்கியம். உடலின் நுழைவாயிலான

வாயை ஆரோக்கியமாக வைத்திருப்பது உடலில் பல நோய்கள் வராமலிருக்க வழி செய்யும்.



ஈறு நோய்கள்:

பற்களின் பாகங்களில் மிகவும் அதிகமாகப் பாதிக்கக்கூடியது பற்களைச் சுற்றியுள்ள ஈறுதான். பொதுவாக ஈறுநோய் வருவதின் முதல் கட்டம் நிறம் மாறுதல், ஈறு தடிப்பு, பல் ஈறுகளில் இருந்து இரத்தம் கசிதல் ஆகும். இயற்கையாகவே பல் ஈறுக்கும் பற்களுக்கும் இடையே சிறிது இடைவெளி இருக்கும். அதுவே ஈறு வியாதியால் பாதிக்கப்பட்டால் பெருமளவு ஆழமாகி ஒரு பை மாதிரி ஆகி அதில் நிறைய பாக்டீரியாக்களும், பாக்டீரியாவால் வெளி வரும் விஷப் பொருட்களும் மற்றும் ஈறுடன் அழுகிய சில பாகங்களும் உமிழ் நீரும் அடங்கி ஒரு பள்ளம் ஆகிறது. அதில் உற்பத்தியாகும் பொருட்கள் மூலம்தான் பற்களின் ஈறு மட்டும் அல்லாமல் பல் பிடிப்பிற்குக் காரணமாக இருக்கும் எலும்புகளும் மற்றும் லிக்மண்டுகளும் பாதிக்கப்பட்டு பற்களில் அசைவு ஏற்பட்டு முடிவாக தானாகவே பற்கள் விழுவதற்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.

இந்த வகையில் வியாதிகள் ஈறுகளில் ஏற்படும் பொழுது இரத்தம் கசிதல், வாயில் உள்ள உமிழ் நீர் ஒரு திரவம் போல் சமயங்களில் வாய், தாடை போன்றவற்றில் கடைசி வரை பரவுதல் போன்றவைகளாகும்.



பொதுவாக் பிளாக் (Plaque) என்னும் ஒரு வெண்படலம் பற்களின் ஈறுகளைச் சுற்றிப் படருகிறது. இது சாதாரண வெண்படலம் அல்ல. இந்தப்படலம் முழுவதும் விஷக்கிருமிகள் உள்ளன. அதை வளர விடுவதால் தொடர்ந்து அது கெட்டியாகி காரையாக மாறிவிடுகிறது.

ஈறு நோய்க்கான சிகிச்சை



வருடத்திற்கு ஒருமுறை பற்களைச் சுத்தம் செய்து கொள்வதுடன் பற்காரை அகற்றி பற்களை பாதுகாக்க வேண்டும். மேலும் Ultra Sonic Scaler என்ற நவீன கருவி மூலம் பற்களைச் சுத்தம் செய்து கொள்ளலாம்.

பல் சொத்தை



பற்களில் ஏற்படும் சொத்தையானது பாக்டீரியாக்களால் ஏற்படுகிறது. பற்களில் உள்ள குழிகளில் ஒட்டும் தன்மையுள்ள உணவுப் பொருட்கள் தங்கி விடுவது கிருமிகள் வளர வழி வகுத்து பல் அரித்து பல் சொத்தையை ஏற்படுத்துகிறது. பற்கூழைப் பாதிக்கும் பொழுது வலி ஏற்படுகிறது.



பல் சொத்தைக்கான சிகிச்சை



சிறு புள்ளியாக சொத்தை ஏற்படும் போதே பல் மருத்துவரை அணுகி பல் அடைத்துக் கொள்வது நல்லது.

முன் பற்களில் ஏற்படும் சொத்தையை காம்போசிட் எனப்படும் பல்லின் நிறம் கொண்ட சிமெண்ட்டினால் அடைப்பதால் பாதிப்பில்லாமல் பல்லின் அழகு பாதுகாக்கப்படும்.



பல்சீரமைப்பு



பொதுவாக முன் பல் தூக்கலாக இருப்பதற்குக் காரணம் குழந்தை சிறு வயதில் உள்ளபோது விரல் சூப்புவதாலும், பால் பற்கள் விழுந்து முளைக்கும் போது நாக்கினால் முன் பல்லைத் தள்ளுவதாலும், வாய் திறந்தே தூங்குவதாலும் ஏற்படுகிறது. ஆறு வயதுக்கு மேல் பாற்பல் விழுந்து முளைக்கும் சமயம் ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒரு முறை பல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

பல் சீரமைப்புக்கான சிகிச்சை

பொதுவாக கிளிப்புகள் மூலம் வெளியில் தூக்கலாகத் தெரியும் பல் சரி செய்து பொருத்தப்படுகிறது. அதனால் பற்கள் சரியான இடத்திற்குத் தள்ளப்படுவதால் பல்வரிசை சீராக அமையும்.

பற்களைப் பாதுகாக்க என்ன செய்யலாம்?

  • பற்களில் சிறு புள்ளியாக சொத்தை ஏற்படும் போதே பல் மருத்துவரை அணுகி பல் அடைத்துக் கொள்வது நல்லது.



  • பல் சொத்தை, பற்கூழ் பாதித்தாலும் வேர் சிகிச்சை எனும் நவீன சிகிச்சை (RCT) மூலம் பற்களைப் பாதுகாக்கலாம்.

  • பல் சொத்தையால் வலி ஏற்படும் போது பொடி, புகையிலை, கற்பூரம் போன்றவைகளை வைப்பதால் அது நாளடைவில் புற்றுநோய் வருவதற்கு ஏதுவாகிறது. எனவே, இதைத் தவிர்க்க வேண்டும்.



  • வாயில் ஏற்படும் கட்டி, புண் முதலியவற்றைப் பல் மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்.



  • ஆறு வயதுக்கு மேல் பாற்பல் விழுந்து முளைக்கும் சமயம் ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒரு முறை பல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

  • தினமும் இருமுறை பல் துலக்க வேண்டும்.

  var AdBrite_Title_Color = '0000FF'; var AdBrite_Text_Color = '000000'; var AdBrite_Background_Color = 'FFFFFF'; var AdBrite_Border_Color = 'CCCCCC'; var AdBrite_URL_Color = '008000'; try{var AdBrite_Iframe=window.top!=window.self?2:1;var AdBrite_Referrer=document.referrer==''?document.location:document.referrer;AdBrite_Referrer=encodeURIComponent(AdBrite_Referrer);}catch(e){var AdBrite_Iframe='';var AdBrite_Referrer='';} document.write(String.fromCharCode(60,83,67,82,73,80,84));document.write(' src="http://ads.adbrite.com/mb/text_group.php?sid=1252340&zs=3436385f3630&ifr='+AdBrite_Iframe+'&ref='+AdBrite_Referrer+'" type="text/javascript">');document.write(String.fromCharCode(60,47,83,67,82,73,80,84,62)); மருத்துவம்-5

குழந்தைகளுக்கு வரும் மன அழுத்தங்கள்

- வேணு சீனிவாசன்.



மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்

குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள் பலப்பல. தங்களுக்கு ஏற்பட்ட மனஅழுத்தத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள். சில குழந்தைகள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு யாருடனும் பேசாமல் உம்மென்று இருப்பார்கள். சில குழந்தைகள் தங்கள் மன அழுத்தத்தைக் கோபமாகவும், ஆத்திரமாகவும் வெளிக்காட்டுவார்கள். சில குழந்தைகள் எப்போதும் கவலையோடு காணப்படுவார்கள். இதற்கெல்லாம் காரணங்கள் இருக்கலாம் என்று குழந்தை மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். அவையாவன;

1. குடும்பத்தில் தொடர்ந்து நடைபெறும் குழப்பங்கள், வாக்குவாதங்கள்.
2. பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுடன் குழந்தைக்கு உறவில் ஏற்படும் விரிசல்.
3. நட்பில் உண்டாகும் மனவருத்தம்
4. குடும்பங்கள் பிரிந்து விடுதல்
5. மிக நெருக்கமானவர்களின் பிரிவு அல்லது செல்லப்பிராணிகளின் இறப்பு
6. பெரிதாக ஏற்படும் இழப்புக்கள் , அல்லது அதிர்ச்சி ஏற்படுத்திய நிகழ்ச்சிகள்
7. அடிக்கடி ஏற்படும் உடல்நோய்கள், தொற்றுநோய்கள்
8. குழந்தைகளை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்துதல்
9. மற்ற குழந்தைகளின் முரட்டுத்தனம், பிடிவாதம்
10. பள்ளியில் அல்லது வெளிவட்டாரத்தில் தொடர்ந்து ஏற்படும் தோல்விகள்
11. பெற்றோரைப் பாதிக்கும் மனஉணர்வுகள் சில நேரங்களில் குழந்தையையும் பாதிக்கும்.
12. உட்கொண்ட மருந்துகளினால் ஏற்படும் பக்க விளைவுகள்.


- இது போன்ற காரணங்களினால் குழந்தைகள் மனஅழுத்த நோய்க்கு ஆளாகி அவதிப்படுவார்கள். சில குழந்தைகளுக்கு இது பரம்பரையாகவும் வரலாம். அத்தகைய குழந்தைகள் மேலே காட்டப்பட்ட காரணங்களுள் ஏதேனும் ஒன்று ஏற்பட்டால் கூட அதை ஏற்றுக் கொள்ளவோ அல்லது சமாளிக்கவோ முடியாமல் அதிகம் திணறிப் போய்விடுவார்கள். வெகுவிரைவில் மனஅழுத்த நோய்க்கும் ஆளாகி விடுவார்கள்.

நீங்கள் செய்ய வேண்டியவை 

மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெற்றோருடன் பேசுவதற்கு விரும்ப மாட்டார்கள். இருந்த போதிலும், அவர்களுடன் நேரடியாகவோ அல்லது அவர்கள் மிகவும் விரும்புகின்ற நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலமாகவோ பேசுவது நன்மைகளை ஏற்படுத்தும். இவ்வாறு பேசுவதன் மூலமாக அவர்களுக்கு மனஅழுத்தத்தை உண்டாக்கியது எது என்பதை அறிவதற்கு வாய்ப்பு ஏற்படும். அவர்களுடன் உரையாடலில் ஈடுபடும் நேரத்தில் சில விஷயங்கள் மிகவும் முக்கியமானவை. அவையாவன;

1. அவர்கள் சொல்வதை மிகவும் கவனமாகக் கேட்க வேண்டும். இது சொல்வதற்கு மிகவும் எளிது, ஆனால் செயல்படுத்துவது கடினம். 
2. அவர்கள் மனத்தில் இருப்பதைப் பேசிக்கொண்டு இருக்கும் போது நடுவே குறுக்கிடுவது, எனக்கு அப்பவே தெரியும் என்பது, அது தான் நீ எப்போதும் செய்யும் தப்பு என்பது, சரியான முட்டாள் நீ என்று அதட்டுவது போன்ற வார்த்தைகளைக் கொட்டக்கூடாது.
3. அவர்கள் நினைப்பதை அவர்களது சொந்த வார்த்தைகளின் மூலமாகவே வெளிப்படுத்த அனுமதி அளிக்க வேண்டும். அவர்கள் சொல்லி முடிக்கும் வரையில் பொறுமையாக காத்திருக்க வேண்டும். அவர்கள் பேசுவதைக் கொண்டு எப்படியெல்லாம் கற்பனை செய்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
4. குழந்தைகள் சொல்லும் விஷயத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள அவ்வப்போது சிறு கேள்விகள் கேட்கலாம். ஆனால் அது அவர்கள் பேசுவதை தடுப்பதாகவோ, எண்ணத்தை திசை திருப்புவதாகவோ இருக்கக் கூடாது.
5. ஆதரவு வார்த்தைகள், நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைச் சொல்லி அவர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
6. நான் உன்னை ஒரு வாரமாகக் கவனித்து வருகிறேன். நீ மிகவும் கவலையோடு இருக்கிறாய் என்று சொல்லவேண்டும். இவ்வாறு சொல்வதன் மூலமாக பெற்றோர் தன்னை கவனித்து வருகிறார்கள், தனது நலனில் அக்கறை காட்டுகிறார்கள் என்பதை குழந்தைகள் புரிந்து கொள்வார்கள். இந்த எண்ணம் அவர்கள் மனஅழுத்தத்தில் இருந்து விடுபட பெரிதும் உதவும்.


- இவ்வாறு அவர்களுடன் கலந்துரையாடி மனஅழுத்தத்திற்கான காரணத்தை அறிந்து கொண்ட பிறகு நீங்கள் அதை போக்குவதற்கான செயல்களில் ஈடுபட வேண்டும். இதற்காக நீங்கள் செய்ய வேண்டியவை.

மன அழுத்தம் போக்கும் வழிமுறைகள்

1. மன அழுத்தத்தில் இருந்து அவர்களை விடுவிப்பதற்காக நீங்கள் செயல்படுவதை அவர்களுக்கு முதலில் உணர்த்துங்கள்.
2. இதன் மூலமாக அவர்களுடைய சரியான ஓத்துழைப்பை நீங்கள் பெறமுடியும்.
3. குழந்தைகள் அடிக்கடி தங்களை குறைகூறிக் கொண்டால், அவ்வாறு நினைக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்துங்கள்.
4. தேவைப்பட்ட மாறுதல்களை உண்டாக்குங்கள். உதாரணமாக தொல்லை கொடுக்கும் நண்பர்களை மாற்றுவது. வகுப்பறையில் வம்பு செய்யும் மாணவனை விலக்க, உங்கள் மகனை வேறு இடம் மாற்றி உட்கார வைப்பது. புதிய நண்பர்களை அறிமுகம் செய்து வைப்பது, புதிய இடங்களுக்கு அழைத்துச் செல்வது, புதிய விளையாட்டுக்களில் ஈடுபடுத்துவது, வளர்ப்புப் பிராணிகளைப் பரிசளிப்பது போன்றவை.
5. தங்களுக்குத் தேவையான பாதுகாப்பும், உதவியும் கிடைப்பதை உணர்ந்ததும் குழந்தைகள் மனஅழுத்தத்தில் இருந்து விடுபடுவார்கள்.
6. பெற்றோரின் மரணம், விவாகரத்து, எதிர்பாராத அதிர்ச்சி போன்றவைகளினால் மனஅழுத்த நோய்க்கு ஆளான குழந்தைகள் நீண்ட கால சிகிச்சைக்குப் பிறகே நோயிலிருந்து விடுபடுவார்கள்.
7. குழந்தைகளுக்கு எந்த உணர்வு மனஅழுத்தத்தை அதிகமாக்குகிறது, எந்த உணர்வு மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது என்பதைத் தெளிவாகக் கற்றுக் கொடுங்கள்.
8. தங்களுக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தை எப்படி வெளிப்படுத்துவது என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். பெண் குழந்தைகள் அழுவதன் மூலமாக தங்கள் மனதை லேசாக்கிக் கொள்வார்கள். ஆண் குழந்தைகளுக்கு இதை நாம் சொல்லித் தருவது அவசியம்.
9. தோல்விகளும், துயரங்களும் எல்லோருக்கும் ஏற்படுவதுண்டு. எனவே இது ஏதோ விபரீதமானதோ, அல்லது நடக்கக் கூடாததோ அல்ல என்பதை குழந்தைகளுக்குப் புரியும் படியாக எடுத்துச் சொல்லுங்கள்.
10. அவர்களுக்கு மனமகிழ்ச்சி அளிக்கின்ற செயல்களை செய்வதற்கு அனுமதி அளியுங்கள். அது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுங்கள்.
11. மனஅழுத்தத்திற்கு ஆளான குழந்தை மற்ற பள்ளித் தோழர்களுடன் சுற்றுலா செல்ல விரும்பினால் மன அழுத்தத்தைக் காரணம் காட்டி அதைத் தடுக்காதீர்கள். இந்த மாறுதல் அந்த குழந்தைக்கு மிகவும் அவசியமான சிகிச்சை போன்றது என்பதை உணர்ந்து அதற்கேற்ப நடந்து கொள்ளுங்கள்.
12. குழந்தைகளுக்குப் பிடித்த விஷயங்களை அவர்கள் செய்யும் போது, சரியாகச் செய்கிறார்களா என்பதை கவனியுங்கள். சரியான முறையில் செய்யும் போது தவறாமல் பாராட்டுங்கள்.
13. தேவைப்பட்ட போது மருத்துவரிடம் அழைத்துச் சென்று இரத்தம், சிறுநீர், ஆகியவற்றை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
14. குழந்தைகள் நன்றாக உண்ணும் படியாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களுக்குப் பிடித்த உணவு வகைகளை கொடுத்து வயிறார சாப்பிடச் செய்யுங்கள்.
15. சில சாதாரண உடற்பயிற்சிகளை வேகமாக நடப்பது, ஓடுவது, போன்றவற்றை செய்யச் சொல்லி குழந்தையின் மனஉளைச்சலைக் குறையுங்கள்.
16. மேற்கண்ட முறைகளை கடைப்பிடித்த பிறகும், மன அழுத்தத்திற்கான காரணத்தை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலோ அல்லது குழந்தையின் மனஅழுத்தம் குறையவில்லை என்றாலோ குழந்தை மனநல மருத்துவரின் உதவியை தயக்கம் இல்லாமலும், காலதாமதம் செய்யாமலும் நாடுங்கள்.
17. மற்றவர்கள் குழந்தையைக் கேலி செய்வார்களோ அல்லது பைத்தியம் என்று முத்திரை குத்தி விடுவார்களோ என்று பயந்து கொண்டு, விஷயத்தை வெளியே தெரியாமல் மூடி வைக்காதீர்கள்.
18. மருத்துவ உதவியை சரியான நேரத்தில் சரியான மருத்துவரிடம் செய்யாமல் போனால் மற்றவர்களை வேண்டுமானால் நீங்கள் திருப்திப் படுத்தலாம், ஆனால் உங்கள் செல்லக் குழந்தையின் எதிர்காலம் பாழாகி விடக்கூடும். எனவே இதை மனதில் கொண்டு உறுதியோடு செயல்படுங்கள்.
19. குழந்தையின் உடல்நலத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து, மற்றவர்களின் வீண்பேச்சை அலட்சியம் செய்வதே, குழந்தையின் மனநலம் சீர்படுவதற்கு விரைவாக உதவி செய்யும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
20. உண்மையில் உங்களது நண்பர்களும், உங்கள் குழந்தை மீது அக்கறை கொண்டவர்களும் நீங்கள் மருத்துவரின் உதவியை நாடுவதை ஆதரிப்பார்கள். நீங்கள் செய்வது சரியானது தான் என்று பாராட்டுவார்கள்.


மருத்துவம்-7

விடலைகள் மனத்தில் இடம் பிடிக்க...

- வேணு சீனிவாசன்.



விடலைப் பருவத்தில் (Teen Age) உள்ள குழந்தைகளை சமாளிப்பது என்பது சாதாரண செயல் அல்ல. அதற்கு நிறைய பொறுமையும், சகிப்புத்தன்மையும், விடாமுயற்சியும் தேவை. குழந்தைப் பருவத்தில் இருந்து விடலைப் பருவத்திற்குள் நுழையும் மகனுக்கோ அல்லது மகளுக்கோ உடல், பலவிதமான இரசாயன மாறுதல்களுக்கு உள்ளாகிறது. உள்ளமோ பலவிதமான உணர்ச்சித் தாக்குதலைத் தூண்டுகிறது. இவற்றை சமாளிக்க முடியாமல் அவர்கள் திணறுகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் நடவடிக்கையில், பேச்சில், நடை, உடை பாவனைகளில் மாறுதல்கள் ஏற்படுகின்றன. இந்த மாறுதலை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் புதிய சூழ்நிலையை எதிர்கொள்ள பெற்றோரும் தங்களை தயார்செய்து கொள்வது அவசியம்.

பெற்றோர்களே... விடலைகளை விட்டுப் பிடியுங்கள்



விடலைகள் மனத்தில் இடம் பிடிக்க...

அவர்கள் பெரும்பாலும் தங்கள் நண்பர்களுடன் நேரத்தைக் கழிப்பதைத்தான் விரும்புவார்கள். அதையும் மீறி அவர்கள் உங்களுடன் இருப்பதை விரும்பினால் உங்கள் செயலில் நீங்கள் வெற்றிஅடைந்து விட்டீர்கள் என்பது பொருள். இவ்வாறு விடலைப் பருவத்தில் உள்ள மகனின் அல்லது மகளின் மனதில் நீங்கள் ஒரு நல்ல இடத்தைப் பெற்று விட்டதற்காக உங்களை நீங்களே தோளில் தட்டிப் பாராட்டிக் கொள்ளலாம்

மருத்துவம்-7

உங்கள் குழந்தைகள் உங்களை விரும்ப வேண்டுமா?

 -வேணு சீனிவாசன்.



உங்கள் குழந்தைகள் உங்களை விரும்ப வேண்டும் என்று உங்கள் மனத்திற்குள் ஆயிரம் எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கும். இதற்காக நீங்கள் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழிக்க வேண்டாம். இந்தக் காட்சியைப் படித்துப் பாருங்கள்.

எட்டாம் வகுப்பில் படிக்கின்ற விமலா பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசும் பெறுகிறாள். தன் வெற்றியை பகிர்ந்து கொள்ளவும், பாராட்டுக்களை கேட்கவும் அவரசமாக வீட்டிற்கு ஓடி வருகிறாள்.
வீட்டில் விமலாவின் பெற்றோர் இருக்கின்றனர். அம்மா, சமையல் வேலையில் மும்முரமாக ஈடுபட்டு இருக்கும் போது விமலா உள்ளே நுழைகிறாள்.


அம்மா அம்மா இதோ பாருங்க, எனக்கு முதல் பரிசு கிடைச்சிருக்கு என்று கத்திக் கொண்டே வந்து அம்மாவை கட்டிக் கொள்கிறாள்.

என்ன பரிசு ? என்கிறார் அப்பா, ஷேவ் செய்து கொண்டே.

இதோ இந்த பிளாஸ்டிக் டப்பா என்று பெருமை பொங்க தன் கையில் இருக்கும் டப்பாவைக் காட்டுகிறாள் விமலா.

போயும் போயும் இந்த பிளாஸ்டிக் டப்பாவுக்கா நீ இத்தனை நாள் கஷ்டப்பட்டு உழைச்சே, வெட்டி வேலை என்கிறார் அப்பா, கிண்டலான சிரிப்போடு.

இதனோட விலை பத்து ரூபா இருக்குமா? இது மாதிரி எங்கிட்ட பத்து டப்பா இருக்கு, இதுவா முதல் பரிசுக்கு கொடுப்பாங்க என்கிறாள் அம்மா.

விமலாவின் திறமை, உழைப்பு, ஆர்வம், விடாமுயற்சி, போட்டியில் பெற்ற வெற்றி ஆகிய எதுவுமே பெற்றோர்களின் கண்ணுக்குத் தெரியவில்லை. அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் முதல் பரிசுக்காக கொடுக்கப்பட்ட பொருளின் விலை மட்டுமே. பாசத்தையும், பாராட்டையும் எதிர்பார்த்த விமலாவின் பிஞ்சு நெஞ்சம் நொறுங்கும்; சத்தம் உங்களுக்குக் கேட்கிறதா?

விமலாவின் பெற்றோரைப் போல நடந்து கொள்வது மிகவும் தவறு. நமது குழந்தை பெற்ற வெற்றிதான் முக்கியமே தவிர, பரிசுப் பொருளின் விலை முக்கியம் அல்ல. அது போல பல பிளாஸ்டிக் டப்பாக்கள் ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்கும். ஆனால் அவை காசு கொடுத்து வாங்கியவையே தவிர, வெற்றி பெற்று ஈட்டியவை அல்ல. பலமுனைப் போட்டியை சமாளித்து பரிசு வாங்கி வரும் குழந்தையைக் கொண்டாட வேண்டும், பாராட்ட வேண்டும், பலரிடமும் சொல்லி பெருமைப்பட வேண்டும். இதையே குழந்தைகள் பெற்றோரிடம் எதிர்பார்க்கிறார்கள். இவ்வாறு நடந்து கொள்ளும் பெற்றோரையே குழந்தைகள் பெரிதும் விரும்புகின்றனர்.

இப்போது சொல்லுங்கள் நீங்கள் இப்படி நடந்து கொள்ள விரும்புகிறீர்களா? உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்ளுங்கள். வெற்றி பெற்று வரும் குழந்தையை பாராட்டுங்கள். சற்று அளவிற்கு அதிகமாகவே இருந்தாலும் கவலையில்லை. அது உங்கள் குழந்தைதானே.

இது என்ன பெரிய வெற்றி? உனக்கு நான் எழுதிக் கொடுத்தேன். அப்பா பக்கத்திலே இருந்து பலமுறை படிக்க வைத்தார். அப்படியும் ஜெயிக்கலைன்னா நீ தண்டம், மகா மக்கு என்ற ரீதியில் குழந்தைகளிடம் பேசாதீர்கள். நீங்கள் எழுதிக் கொடுத்தது சரிதான், உங்கள் குழந்தைக்கு நீங்களே முயற்சி எடுக்காத போது, வேறு யார் முன் வந்து உதவி செய்வார்கள். ஆகவே அதை சொல்லிக் காட்டுவது சரியல்ல. இவ்வாறு நீங்கள் உடன் இருந்து உழைத்தும் உங்கள் குழந்தைக்கு வெற்றி கிடைக்காவிட்டால்? என்ன ஆகியிருக்கும்.

என் உழைப்பை எல்லாம் வீணாக்கி விட்டாய், எனது பொன்னான நேரத்தின் அருமை தெரியாதவள் நீ. நான் மட்டும் நீ எக்கேடு கெட்டுப்போ என்று நினைத்து என் வேலையைப் பார்த்திருந்தால் இந்த நேரத்தில் இரண்டு ஜாக்கெட் தைத்திருப்பேன் என்று புலம்பி இருப்பீர்கள் அல்லவா?

ஆகவே குழந்தையின் வெற்றியில் உங்களுக்குப் பங்கு இருப்பதை சுட்டிக் காட்டாதீர்கள். அதற்காக பழி தீர்த்துக் கொள்ளுவதைப் போல அந்த வெற்றியை குறைத்து மதிப்பிடாதீர்கள். வெற்றியின் விலையை பரிசுப் பொருளின் விலையை வைத்து எடை போடாதீர்கள். குழந்தைகளின் சந்தோஷத்தை, திறமையைப் பணத்தை அளவு கோலாகக் கொண்டு கணிப்பது மிகவும் தவறான செயல். எனவே அந்த வெற்றியைப் பாராட்டுங்கள். குழந்தை உங்களை மிகவும் விரும்புவார்கள். ஏனென்றால் நீங்கள் எதைக் கொடுக்கிறீர்களோ அதுவே திரும்பவும் கிடைக்கும் என்பதே இயற்கை விதி. இதனை மதித்து நடக்கும் பெற்றோர்களுக்கு குழந்தைகளிடையே அன்பும், பாசமும் பெருகுவது நிச்சயம்.

குழந்தைகளின் செயல்முறை அட்டவணை தயாரித்துக் கொள்ளுங்கள்


குழந்தையின் வளமான எதிர்காலத்திற்கு அடிப்படையாக அமைவது அதன் நடவடிக்கைகள் தான். சின்னச் சின்னச் செங்கல்கள் ஒன்றாகச் சேர்ந்து பிரம்மாண்டமான கட்டிடத்தை எழுப்புகிறது. அதைப் போலவே குழந்தையின் சின்னச் சின்னச் செயல்கள் தான் எதிர்காலத்தை எழுப்பும் அஸ்திவாரமாக அமைகின்றன. இதை மனதில் கொண்டு ஒரு வார காலத்திற்கு உங்கள் குழந்தையின் செயல்பாடுகளை உற்று நோக்கி குறிப்பேட்டில் குறித்து வாருங்கள். அந்த குறிப்பில் நீங்கள் அவர்களிடம் கண்ட நல்ல நடத்தைகள், அவர்களின் செயல்திறன், எந்த வேலையில் ஆர்வம் அதிகம் காட்டுகிறார்கள், எந்த வேலையைச் செய்ய முகம் சுளிக்கிறார்கள், என்பதை எல்லாம் ஒன்று விடாமல் குறிக்க வேண்டும். நீங்கள் நல்ல நடத்தை என்று எண்ணுவதையும், கெட்ட நடத்தை என்று எண்ணுவதையும் இரண்டு பகுதிகளாக பிரித்து அதன் கீழ் குறித்து வரவேண்டும்.

இந்த அட்டவணையில் உங்கள் குழந்தையின் மனவெழுச்சி, உற்சாகம், பயம், உடல் நலம், சேவை மனப்பான்மை, அறிவுத்திறன், சமூக அக்கறை , உடல்வலு போன்ற பலதரப்பட்ட அம்சங்களின் அடிப்படையில் அவர்கள் செயல்கள் அமைந்திருப்பது ஒருவார காலத்திற்குப் பிறகு தெரிய வரும். உங்கள் செல்லப்பெண் எதற்காக மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள்? உங்கள் மகனின் நடத்தையில் ஆசிரியரை எரிச்சல் ஊட்டிய செயல் எது? வீட்டில் இருப்பவர்களிடம் அவன் பாசமாக இருப்பதை காட்டும் நிகழ்ச்சி எது? உங்கள் குட்டிப்பெண் செய்த எந்த செயல் சரியானது? அல்லது மாற்றப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்புகின்ற செயல் எது? குழந்தைகள் மிகவும் விரும்பியது எது? மிகவும் வெறுத்தது எது? போன்ற பல செயல்களை அந்த அட்டவணை காட்டும்.

இந்த அட்டவணையைக் காய்தல் உவத்தல் அதாவது விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பாற்பட்டு தயார் செய்ய வேண்டும். ஏன் என்றால் நமது குழந்தை எதிர்காலத்தில் எவ்வாறு இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ அவ்வாறு அவர்களை வடிவாக்கம் செய்ய இந்த அட்டவணைதான் அஸ்திவாரமாக அமைகிறது. எனவே மிக முன்ஜாக்கிரதையுடன் இந்த அட்டவணையைத் தயாரித்தால், ஒரு புறம் அவர்களது நல்ல குணங்களும், மறுபுறம் மாற்றம் காணவேண்டிய குணங்களும் இருப்பதை அறியமுடியும்.